common

செல்லிடத் தொலைபேசி நன்னடத்தைகள்

செல்லிடத் தொலைபேசி இன்று மனித வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. வயது, பால், இன, மத, சமூக வேறுபாடுகள் இன்றி சகல தரப்பினரும் இதனை பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பம் என்னதான் வசதிகளைச் செய்து தந்தாலும், அதனைப் பயன்படுத்தும் நாம் எதைச் செய்யலாம், எதைத் செய்யக்கூடாது என்ற வரையறைகளைக் கொண்டிருப்பது அவசியம். நாம் வெளிப்படுத்தும் நன்னடத்தை அல்லது ஒழுக்கம் என்பவற்றைக் கொண்டு மற்றவர் நம்மை மதிப்பிடுவர். செல்லிடத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் செல்லிடத் தொலைபேசியை எப்படிப் பயன்படுத்துவது என்று கையேடுகளைத் தருகின்றன. ஆனால் “செல்லிடத் தொலைபேசி நன்னடத்தைகள்” என்றோ “செல்லிடத் தொலைபேசி ஒழுக்கக் கோட்பாடு” என்றோ ஒன்றைத் தருவதில்லை. ஆனால் அவை அவசியம் என்பதை நம்மிடம் காணப்படும் செல்லிடத் தொலைபேசி பாவனை முறை காட்டுவதைக் காணலாம். திருக்குறள் கூறுவதுபோல் “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி“. எனவே செல்லிடத் தொலைபேசி நன்னடத்தைகள் எம்மிடம் காணப்பட்டால் நல்லதே!

நகர்பேசி நன்னடத்தைக் கையேடு
நகர்பேசி நன்னடத்தைக் கையேடு
  • மெதுவாகப் பேசுங்கள்.
  • முக்கியமான விடயம் பேசும்போது செல்லிடத் தொலைபேசி அணைத்துவிடுங்கள்.
  • மற்றவர்களுடன் உணவருந்தும்போது செல்லிடத் தொலைபேசி பாவனையைத் தவிருங்கள்.
  • நீங்கள் பேசுவதை பக்கத்தில் உள்ளவர்களும் கேட்பார்கள் என்பதால் சொற்களில் கவனமாகவிருங்கள்.
  • பொது இடங்களில் இருந்து தனிப்பட்ட பிரச்சனைகளைப் பேசுவதைத் தவிருங்கள்.
  • முடிந்தவரை செல்லிடத் தொலைபேசி ஒலியை நிறுத்தி வையுங்கள்.
  • மற்றவர்கள் இருக்கும்போது அழைப்பு வந்தால், தள்ளிச் சென்று பேசுங்கள்.
  • வாசிகசாலை, நூதனசாலை, கோயில் (வணக்கத்தலம்), உணவு விடுதி, பாடசாலை, விரிவுரை கூடம், கூட்டம், மரண வீடு, திருமண வீடு, படமாளிகை போன்ற இடங்களில் செல்லிடத் தொலைபேசியில் பேச வேண்டாம்.
  • கூட்டம், வகுப்பறை போன்ற இடங்களில் இருந்து கொண்டு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம்.
  • செல்லிடத் தொலைபேசியின் ஒலிபெருக்கியை மாற்றவர் இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம்.
  • தொல்லை கொடுக்கும்விதமாக திரும்பத்திரும்ப குறித்த நேர இடைவெளியில் அழைப்பை ஏற்படுத்த வேண்டாம்.
  • நீங்கள் அழைக்கும் ஒருவர் இன்னொரு தொடர்பில் இருப்பதை அறிந்தால், மீண்டும் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்த வேண்டாம்.
  • பேசும் இடத்தில் அதிச ஒலி (இரைச்சல்) இருந்தால், பேச வேண்டாம்.
  • பேசும்போது இருமல், தும்மல், உண்ணுதல் ஆகியவற்றைத் தவிருங்கள்.
  • நீதிமன்றத்திலும், விமானப் பயணத்திலும் பாவனை வேண்டாம்.
  • நடந்து செல்கையில், குறிப்பாக பாதையைக் கடக்கையில் பயன்படுத்த வேண்டாம்.
  • வாகனம் ஓட்டும்போது செல்லிடத் தொலைபேசி பாவனை வேண்டவே வேண்டாம்.
  • செல்லிடத் தொலைபேசியை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். அது உங்களை கட்டுப்படுத்த அனுமதியாதீர்கள்!

Leave a comment