psychology

பிக் பாஸ்

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வெறுமனே ஒரு பொதுபோக்காக மட்டும் இல்லாது, ஒரு சமூகத்தின் உளவியலை ஆய்வும் செய்யும் நிகழ்ச்சியாகக் காணப்படுகிறது. தெரிந்தோ, தெரியாமலோ இவ்வாய்வில் பலர் பங்கெடுப்பது இதன் சிறப்பம்சம்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களின் பண்புகளையும் நடத்தையையும் வெளிப்படுத்துகிறார்கள். இதனைப் பார்ப்பவர்கள் அது சரியல்ல, இது பிழையல்ல என விமர்சனம் செய்கிறார்கள்.

அங்கு ஒருவர் அநியாயமாக நடத்தப்படும்போது, இங்கு பலர் கொந்தளிக்கிறார்கள். இதனை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அங்குள்ள சிலர் கெட்டவர்கள் போலும் இங்குள்ள பலர் நல்லவராகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் தென்படலாம்.

ஆனால், இது உண்மையல்ல. மற்றவரின் பிழையைப் பெரிதாகவும், தன் பிழையை கண்டுகொள்ளாத உளவியல் நடத்தைதான் இங்கும் காணப்படுகிறது. அங்கு உள்ளவர்களைவிட மிக மோசமானவர்கள் எம்மிடையே உள்ளனர். அங்கு அவர்களைக் ஒளிப்பதிவுக் கருவி கண்காணிக்கிறது. நம்மைக் கண்காணிக்கவில்லை.

அங்கு கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார், ஆபாசமாக உடையணிந்துள்ளார் என்று பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நீங்கள், அவர்களைத் திட்டித்தீர்க்க மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறீர்களே. இந்த சமூகத்தில் இல்லாததா அங்கு உள்ளது.

அங்கு அடக்குமுறை, அதர்மம், அநியாயம் நடக்கிறது எனக் கெதித்தெழும் நாம் ஏன் ஊழல் அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் போன்றோர் மீது எம் கோபத்தைக் காட்டுவதில்லை. அங்கு கை வைத்தால் எம் தலை போகும் என்ற பயத்தில் உள்ளோம் அல்லவா?

 

common · motivation · psychology

மகிழ்ச்சி

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

மகிழ்ச்சி
மகிழ்ச்சி

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்… அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ”ராஜாவைப் பார்க்க வேண்டும்” என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ”என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?” என்றார் அரசர்.

”ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்” என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ”விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட, முக்கியமான ஒன்று…
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்… அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!’ என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்’ என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.

அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை… எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

அரண்மனைகளில்
கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.

வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.

குறிப்பு: இது முகநூல் பதிவு ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது.
psychology

செல்பி

ஆங்கிலச் சொல்லான “Selfie” என்பது தமிழில் செல்பி, செல்ஃபி, தாமி, சுய படம் அல்லது சுய ஒளிப்படம் என அழைக்கப்படுகின்றது. தன்னைத்தானே ஒளிப்படம் எடுப்பதைக் குறிக்கும் இது, இன்று சமூக வலைத்தளங்களான முகநூல் (பேஸ்புக்), டுவிட்டர் போன்றனவற்றில் பகிரப்படுகின்றது. ஆயிரக்கணக்கான செல்பிகள் இன்று பரவலாக பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்படுகின்றன. இது சிலருக்கு பொதுபோக்காகவும், சிலருக்கு சிக்கலில் மாட்டிவிடும் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

செல்பி

உளவியற் காரணிகள்

புலனறிவு நரம்பியல் விஞ்ஞானக் கருத்தின்படி, செல்பி எடுப்பவர்கள் ஆணவச் சார்புள்ளவர்கள் என்கிறது. ஏப்பிரல் 2014 இல், பத்து மணித்தியாலங்களாக சரியான (பொருத்தமான) செல்பி எடுக்க முயன்ற ஒருவர் தன்னால் அது முடியாது போகவே அவருடைய உடல் இரு உருவக் கோளாறுக்கு உட்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து, மருத்துவ உதவி பெற்றுள்ளார்.

மனிதன் காலகாலமாகவே தன்னை “வெளிக்காட்டுவதில்” முனைப்பாக இருந்து வருகின்றான். செல்பி அத் தன்முனைப்புக்கு இலகுவாக வழிசெய்து கொடுக்கிறது. அது பிழையல்ல, ஆனால் அளவுக்கு அதிகமாக செல்பிக்கு “அடிமையாகிப் போகும்” நிலை ஏற்பட்டால் அது உளநலக் குறைபாடு என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

அவர்களின் பலபேரிடம் செய்தஆய்வின்படி, உடல் இரு உருவக் கோளாறு, தன்னம்பிக்கைக் குறைபாடு, தற்காதல் கோளாறு, சமுதாய பொறுப்புணர்வற்றவர், கையாளல் திறமையின்மை, சுயமறுப்பு ஆகிய உளவிற் குறைபாடு உள்ளவர்கள் அதிகம் செல்பி எடுக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.


படம்: விக்கிமீடியா பொதுவகம்
உசாத்துணை: ஆங்கில விக்கிப்பீடியா, ஸ்டைலிஸ் (யுகே), டெய்லி மெயில் (யுகே), சைகோலஜி டுடே
psychology

குப்பை வண்டி விதி

வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி விமான நிலைத்திலிருந்து என்னுடைய இடத்திற்கு போயக் கொண்டிருந்தேன். நான் பயனித்துக் கொண்டிருந்தபோது கருப்பு நிற வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக நான் பயனித்த வாகனத்தின் குறுக்கே வந்தது. நான் பயனித்த வாகன ஓட்டுனர் மிகத் திறமையாக செயற்பட்டு ஒரு சில அங்குலங்களில் பேராபத்தை தவிர்த்துவிட்டார்.garbage truck

பிழையாக குறுக்கே வந்த அந்த கருப்பு நிற வாகன ஓட்டுனர் எங்களை திட்டித் தீர்த்தார். நான் பயனித்த வாகன ஓட்டுனரோ அவரைப் பார்த்து புன்னகைத்து கையசைத்து விடை கொடுத்தார். அவரின் அணுகுமுறையில் ஆச்சரியமடைந்த நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள்? நம் இருவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பும் விதமாக அல்லவா அவர் வாகனம் ஓட்டினார்!’

‘குப்பை வண்டி விதி’ இதைத்தான் அந்த ஓட்டுனர் அன்று எனக்கு கற்றுத்தந்தார்.

அநேகமானோர் குப்பை வண்டிகள் மாதிரி. அவர்கள் மனச்சோர்வு, கோபம், விரக்தி போன்ற குப்பைகளால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். குப்பை குவியலாகியதும், அதை கொட்டிவிட அவர்களுக்கு ஓர் இடம் தேவை. சிலவேளை அந்த இடம் நீங்களாகக்கூட இருக்கலாம். இதை தனிப்பட்ட ஒன்றாக எடுக்காதீர்கள். மாறாக புன்னகைத்து, வாழ்த்தி, விடை கொடுங்கள். அவர்கள் குப்பையை எடுத்து மற்றவர்கள் மீது வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, தெருவிலோ கொட்டிவிடாதீர்கள்.

அடிப்படை என்னவென்றால் வெற்றியடைந்தவர்கள் குப்பை வண்டி தங்கள் நாளை கெடுக்க விடமாட்டார்கள்.

10 வீதமான வாழ்வு நீங்கள் அதை எப்படி உருவாக்குகின்றீர்கள் என்பதிலும்
90 வீதமான வாழ்வு நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதிலும்தான் உள்ளது.

மேலும் வாசிக்க: 90/10 கொள்கை

 
Thanks to unknown author; received this law from a friend via email.
psychology

90/10 கொள்கை

90/10 கொள்கை அல்லது 90/10 விதி அல்லது 90/10 தத்துவம் (90/10 principle) எனப்படுவது அமெரிக்காவின் பிரபல்யம்மிக்க எழுத்தாளரான ஸ்டீபன் கோவே (Stephen Covey) என்பவரால் அவர் எழுதிய நூல்களில் ஒன்றில் விபரிக்கப்பட்டது.

90/10 கொள்கை

90/10 கொள்கை என்றால் என்ன?

உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. 90% எப்படி நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள் என்பதில் தங்கியுள்ளது.

இது எப்படி?

உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் 10% சம்பவங்களில் உங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

ஓடிக்கொண்டிருக்கும் வாகனம் பழுதாகிவிடாமலிருக்க, எம்மால் தடுக்க முடியாது. தாமதமாக வரும் விமானத்தாலும், எம் முழு திட்டமும் குழம்பி விடுகின்றன. மிகுந்த வாகன நெரிசலில் நம்மை ஒருவர் முந்திச் செல்லுகிறார். இவற்றையெல்லாம் எம்மால் தடுக்க முடியாது.
இந்த 10% த்தில் எமக்கு கட்டுப்பாடு இல்லை.

மீதி 90%மும் மாறுபட்டது. அந்த 90%ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.

எப்படி? உங்கள் பதில் செயற்பாடு மூலம்.

வாகன நெரிசலில் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியும்.

மற்றவர்கள் உங்களை முட்டாளாக்க அனுமதியாதீர்கள்.

ஆனால், சம்பவங்களை எதிர்கொள்ளும் விதம் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

ஓர் உதாரணம்:

காலை உணவை குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் நீங்கள் அலுவலகம் செல்ல அணிந்திருந்த உடையை அசிங்கப்படுத்திவிடுகிறது.

இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

ஆனால், அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிப்பது, நீங்கள் எவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.

நீங்கள் திட்டுகிறீர்கள். தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக உங்கள் மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்க்கிறீர்கள்.

மகள் அழத் தொடங்குவாள்.

அடுத்ததாக, தேனீர்க் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் மனைவி மீது பழியைப் போடுகிறீர்கள்.

அதனைத் தொடர்ந்து ஒரு சிறிய வாய் யுத்தம்.

கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு உடையை அணிந்து வருகிறீர்கள். அங்கே நீங்கள் உங்கள் மகள் அழுது கொண்டே காலையுணவை முடித்து, பாடசாலை செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள்.

சற்று முன் நடந்த நிகழ்வினால் உங்கள் மகள் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள்.

உங்கள் மனைவியும் உடனடியாக அலுவலகத்திற்குப் போக வேண்டும். ஆகவே, அவசர அவசரமாக மகளை காரில் ஏற்றிக் கொண்டு பாடசாலை நோக்கி விரைகிறீர்கள்.

தாமதித்தினால், 30 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய வீதியில் 40 மைல் வேகத்தில் பயணிக்கிறீர்கள்.

15 நிமிட தாமதம் மற்றும் வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காக அபராத தொகையையும் செலுத்திவிட்டு பாடசாலையை அடைகிறீர்கள்.

‘போய் வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் உங்கள் மகள் பாடசாலைக்குள் ஓடிவிட்டாள்.

20 நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்திற்கு போய்ச்சேர்கிறீர்கள். அப்போதுதான் உணர்கிறீர்கள்  பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டதை.

அன்றைய தினத்தின் தொடக்கமே குழப்பமாகிவிட்டது. மேலும் மேலும் அது மேசமடைந்து கொண்டே போகிறது.

அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்கிறீர்கள்.

வீடு வந்தடைந்தவுடன் உங்களுக்கும் உங்கள் மனைவி, மகளுக்குமிடையேயான உறவில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.

ஏன்?

காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்.

இந்த நாள் இப்படி குழப்பமாக போனதற்கு காரணம் என்ன?
அ) அந்த கோப்பைத் தேனீரா?
ஆ) அதற்கு காரணமான உங்கள் மகளா?
இ) அபராதம் விதித்த போலீஸ்காரனா?
ஈ) நீங்களா?

சரியான விடை: “ஈ”

அந்தத் தேனீர் சிந்தியதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் காரணம்.

நீங்கள் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்க வேண்டும்:

தேனீர் உங்கள் மீது படுகிறது. உங்கள் மகள் அழப் போகிறாள்.

நீங்கள் அன்பான குரலில், ‘பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்து கொள் செல்லமே!’

சிந்திய தேனீரை டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து உடையை மாற்றிக் கொண்டு பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள். அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே உங்கள் மகள் பாடசாலை பேருந்தில் ஏறுவதைக் காண்கிறீர்கள். 5 நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் காலை வணக்கத்தை பரிமாறிக் கொள்கிறீர்கள்.

வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?

இரண்டு விதமான நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன.

ஏன்?

ஏனென்றால், நீங்கள் நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம்.

உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் 10% சம்பவங்களில் உங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. 90%உம் எப்படி நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள் என்பதில்தான் தங்கியுள்ளது.

90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்.

யாராவது உங்களைத் குறைவாகப் பேசினால், ஈரத்தை உறிஞ்சும் பஞ்சுபோல ஆகிவிடாதீர்கள். அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர்போல வழிந்து ஓட விட்டுவிடுங்கள். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும். தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம்; உங்களின் வேலையை இழக்கலாம்; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.

உங்கள் வாகனத்தை ஒருவர், வாகன நெரிசலில் தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?

பொறுமையை கோபமாகி விடுவீர்களா? உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? (என் நண்பர் .ஒருவர் ஸ்டீரிங்கையை கழட்டி எடுத்துவிட்டார்) திட்டித் தீர்ப்பீர்களா? உங்களின் ரத்த அழுத்தம் ஏறுகிறதா? 10 வினாடிகள் தாமதமாகச் சென்றால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா? உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் நீங்கள் அனுமதிக்க வேண்டும்?

90/10 கொள்கையை நினைவிற் கொண்டு, அது பற்றிய கவலையை விடுங்கள்.

உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்? நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை புதிய வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள்.

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த திட்டங்களெல்லாம் குழம்பி விடுகின்றன.

அதற்காக விமான அலுவலர் மீது ஏன் வெறுப்பைக் காட்ட வேண்டும்? விமானம் புறப்படுவதற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தாமதமான நேரத்தை புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் அறிமுகமாவதிலோ செலவிடுங்கள். ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

இப்போது 90/10 கொள்கை பற்றி உங்களுக்குத் தெரியும். இதை நடைமுறைப்படுத்தி வியப்பான விளைவுகள் பாருங்கள். பயன்படுத்திப் பாருங்கள். அதனால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.

90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை. மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.

விளைவு என்ன?

உங்களை நீங்களே பார்ப்பீர்கள்!

கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.

வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள்!

இது அனுபவங்களை உருவாக்குவதற்கு நாமாகவே அனுமதியைக் கொடுக்க வேணடிய மனோபலத்தை மாத்திரம் எடுக்கிறது.
 
_____________________________________________________________
ஆங்கிலத்தில் யூடியூப் (youtube) மூலம் காண, கீழுள்ள இணைப்பைப் பாவிக்கலாம்.
The 90/10 principle is available in English with music as a video clip. Use/click the above youtube embed video.
psychology

பேஸ்புக் = 80% பொய்

 facebook chat joke

இணையத்தில் ‘பேஸ்புக்’ தளம் எவ்வளவு வேகமாகப் பிரபலம் பெற்று வருகிறதோ, அந்தளவு வேகமாக அதன் பாவனையாளார்கள் பொய்யர்களாகி வருகின்றார்கள்.

டெலிகிராப் எனும் பிரித்தானிய பத்திரிக்கை அறிக்கையின்படி ‘டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்’ எனும் நிறுவனத்திற்காக ‘ஒப்டிமம் ஆய்வு’, 2000 பேரிடம் நடாத்திய ஆய்வில் பேஸ்புக், டுவிட்டர் பாவனையாளர்கள் பலர் தங்களைக் குறித்த பொய்யான தகவல்களையே இத்தளங்களில் அதிகம் எழுதுவதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் நம்பகத் தன்மையற்றவை என்றும், 80 வீதமானவர்கள் தம்மைப்பற்றிய பொய்யான தகவல்களைப் பரிமாறுகின்றார்கள் எனவும் அறிக்கையிட்டுள்ளது.

 பேஸ்புக் பாவனையாளர்கள் பெயர், புகைப்படம், தொழில், படித்த பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம் (பல்கலைக்கழக பட்டமே இல்லாதிருந்தாலும் கூட) தங்கள் விருப்புக்கேற்ப மாற்றி பொய் கூறவே விரும்புகின்றனர். அழகான ஒரு பெயரையோ அல்லது தங்கள் பிள்ளைகளின் பெயரையோ, அழகான தனது நண்பரின் புகைப்படத்தையோ (புகைப்படம் கிடைக்காவிட்டால் இன்டர்நெட்டிலிருந்து கிடைத்த அழகிய புகைப்படம்) இன்னும் பலவற்றை தங்கள் கற்பனைக்கு ஏற்ப பயன்படுத்தி பிறரின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

ஒல்லியான ஆண்கள் கட்டழகான ஆணின் படத்தையும், சுமாரான பெண்கள் கவர்ச்சியான பெண்ணின் படத்தையும் தனதாக்கி கற்பனை உலகில் சஞ்சரித்து வாழ்தல் என பொய்கள் நீண்டு செல்கின்றன.

மனிதர்கள் பலர் தங்களால் உண்மையாகவே அடைய முடியாத நிலையை தங்கள் ‘அதீத கற்பனை’ (Fantasy) மூலம் அடைந்ததாக உருவப்படுத்திக் கொள்வர். இது உளவியலின்படி ‘பாதுகாப்பு பொறிமுறையின்’ (Defence Mechanism) இரண்டாம் நிலையான ‘முதிர்ச்சியற்ற’ (Immature) நிலையில் ஏற்படும். உதாரணமாக, பொருளாதார வசதியற்ற ஒருவர் தன்னை கோடீஸ்வரனாக கற்பனையில் உருவகப்படுத்தி, செல்வச் செலிப்பில் வாழ்வதை கற்பனையில் அனுபவிப்பர்.

பேஸ்புக்கில் பொய்களுடன் வாழும் ஒருவர், தன்னால் அடைய முடியாதவற்றை கற்பனை உலகில் பொய்கள் மூலம் அடைய முயலும் உளவியல் தாக்கத்திலிருந்து விடுபடுவது தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.